புரமோவைக் காட்டி ஏமாற்றும் ‘பிக் பாஸ் 2’
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17-ம் தேதியன்று பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த் வைத்யநாதன், ஜனனி, சென்றாயன், பாலாஜி மற்றும் அவர் மனைவி நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியிலும், அதன் சமூக வலைதளங்களிலும் தினமும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக, அன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து சில புரமோக்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம் ஆனால், அந்த புரமோக்களில் காட்டப்பட்டதைப் போல் நிகழ்ச்சியில் எதுவுமே நடப்பதில்லை. இதனால், ‘பிக் பாஸ் 2’ ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
உதாரணத்திற்கு, நேற்று வெளியான புரமோ வீடியோவில், சமைத்து கொண்டிருந்த மனைவி நித்யாவிடம், “பொரியல்ல ஒரு வெங்காயம் போடணும்ல?” என்று கடுமையான தொனியில் பாலாஜி திரும்பத் திரும்பக் கேட்பது போன்றும், அதற்கு மும்தாஜ் சமாதானம் செய்வது போன்றும் காட்டப்பட்டிருந்தது. ஆனால், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நித்யாவிடம் பாலாஜி மிகவும் சாதாரணமாகவே கேட்கிறார்.
அதேபோல, நேற்று வெளியான இன்னொரு புரமோவில், மும்தாஜ் பாலாஜியை தனியே அழைத்து, அவரது மனைவியைப் பற்றிக் குறை சொல்வது போலக் காட்டப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் மும்தாஜ் பாலாஜிக்கும், அவர் மனைவி நித்யாவுக்கும் இடையே சமாதானம் செய்யும் நோக்கத்துடனே பேசுகிறார்.
இதுபோன்றே புரமோவில் ஒன்று நிகழ்ச்சியில் ஒன்று என்று தொடர்ந்து காட்டப்படுவதால், ‘பிக் பாஸ் 2’ ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று வெளியாகியுள்ள ஒரு புரமோ வீடியோவில், மும்தாஜ் சென்றாயனுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு, பின்னர் கண்ணீர் விட்டு அழுகிறார். அதன்பிறகு சென்றாயனை, ”நீ வெளில போடா” என்று கோபத்துடன் மஹத் சொல்வது போலக் காட்டப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியிலேயே, “இவர்களுக்கு இதே வேலை, மும்தாஜ் விட்டது ஆனந்தக் கண்ணீராக இருக்கும்” என்பது போன்ற பின்னூட்டங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment