’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து

2 நாட்களாக சப்பென்று சென்று கொண்டிருந்த ’பிக் பாஸ் 2’ நேற்றுதான் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியது என்று கூறலாம். ஒரு வெங்காயத்துக்கு இவ்ளோ பெரிய பஞ்சாயத்தா என்று எண்ணுமளவுக்கு காய்ச்சி விட்டார்கள் மும்தாஜும் நித்யாவும்.
காலையில் ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் மமதி, பாலாஜி உள்ளிட்ட சிலர் உட்கார்ந்தபடியே தூங்கி வழிய மற்றவர்கள் எழுந்து குத்தாட்டம் போடத் தொடங்கி விட்டனர் பொன்னம்பலம் உட்பட.
பாடல் முடிந்ததும் ’நள்ளிரவில் மெயின் கதவு பூட்டப்பட்டு விட்டதால்’ தான் ஒன் பாத்ரூம் போக சிரமப்பட்டு குப்பைக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடியதையும் கலகலப்பாக சொல்லி முடித்தார் பொன்னம்பலம்.
ஆட்டத்திலும், கேமராவைப் பார்த்து பேசுவதிலும், கேமராவைக் காதலிப்பதாகச் சொல்வதிலும் ஓவியாவை நகலெடுக்க முயற்சித்தார் ஐஸ்வர்யா.
ஃபீலா பீலா என்பதுதான் நேற்றைய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க். அதாவது வீட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழு கதை சொல்ல வேண்டும். இன்னொரு குழு அந்தக் கதை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் டாஸ்க். இதைச் செய்து முடித்தால் மொத்தமாக 800 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
முதலில் கதை சொல்ல வந்த நித்யா ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் க்ளைமாக்ஸில் சந்தானமும் உதயநிதியும் சொல்லும் பட்டர்ஃப்ளை கதை போல ஏதோவொரு கதையை அவருக்கேப் புரியாதது போல சொல்லி முடித்தார். என்ன புரிந்ததோ மற்றொரு அணியும் அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து வந்த பாலாஜி நித்யா சொன்ன அதே கதையைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து வேறு மாதிரி சொன்னார். அதையும் உண்மை கண்டறியும் அணி ’ஆமா ஆமா உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டது.
இந்த இரண்டு கதைகளையும் கேட்டு பிக் பாஸே கடுப்பானாரோ என்னவோ? அதன் பிறகு கதை சொல்ல வந்த யாரையும் காட்டவில்லை. நாமும் தப்பித்தோம்.
நேற்றைய பிரச்சினை நித்யா சமையல் செய்வதிலிருந்து தொடங்கியது. கிச்சனில் நித்யா சமைத்துக் கொண்டிருக்க அருகில் மஹத்தும், பாலாஜியும் நின்று கொண்டிருந்தார்கள்.
கேரட் பொரியலில் வெங்காயம் சேர்க்கலாமே என்று பாலாஜி சொல்ல, அதற்கு நித்யா பதில் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தார். பின்னர் மஹத்தும் மும்தாஜும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் நித்யா அதை காதில் வாங்கவே இல்லை. ‘நாளைக்கு வெங்காயம் சேர்த்து செய்து கொள்ளலாம்.. இன்றைக்கு வேண்டாம்’ என்று பிடிவாதமாகக் கூறி விட்டார்.
பின்பு அந்த இடத்திலிருந்து நகர்ந்த பாலாஜி வெளியே சென்று அமர்ந்து விட்டார். பாலாஜியையும் வைஷ்ணவியையும் தவிர்தத அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் வெங்காயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசுகிறார்கள்... பேசுகிறார்கள்... பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அட போதும்பா.. என்று ஆசுவாசம் ஏற்படும் நேரத்தில் மீண்டும் நித்யா அனைவரையும் உள்ளே அழைத்து ’என்னிடம் ஆளாளுக்கு ஆர்டர் போடுகிறார்கள்.. டீம் வொர்க் இல்லை.. என்ன சமைப்பது என்று யாரும் கூடி ஆலோசிப்பது இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
கடுப்பான மும்தாஜ் நீ.........ண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு ‘அடப்போங்கப்பா... நான் இனி குக்கிங் டீம் இல்லை..’என்று சென்று விட்டார்.
இவ்வளவு களேபரத்திலும் ’நாங்க பாக்காத சண்டையா’ என்ற ரேஞ்சில் பொன்னம்பலம் அங்கிருந்த சோபா ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தார்.
கடைசியில் பாத்ரூம் அருகே நித்யாவை தனியாக அழைத்துப் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மும்தாஜ். இறுதியாக திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் (ஆம்.. கடந்த சீஸனில் காயத்ரி அண்ட் கோ பாடிய அதே பாடல்தான்) பாடலை பாடியதோடு பிக் பாஸ் லைட்டை அணைத்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

Basic Electronics - MOSFET

Basic Electronics - Types of Transformers